Friday, November 19, 2010

தளிர்

2


தீபாவளி என்றால், அவன் பள்ளியில் குறைந்தது மூன்று நாட்களாவது விடுப்பு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குக் கண்ணன் வீட்டில், அவன் அம்மாயி வீட்டுக்குப் போவதுதான் வழக்கம். அவன் அம்மாயி தாத்தாவிற்கு இரண்டு மகள்கள் உண்டு. கண்ணனுக்கு மாமன் இருந்தார். அவர் கண்ணனுக்கு இரண்டு வயது இருந்த போதே இறந்துவிட்டார். அவன் அப்பா வீட்டிலோ, கண்ணனின் இரண்டு அத்தைகள், அத்தை பிள்ளைகள் என ஒரு பட்டாளமே இருக்கும். இந்த தீபாவளிக்கு ஏனோ கண்ணனுக்கு அவன் ஆத்தா வீட்டிற்குச் செல்ல வேண்டுமெனத் தோன்றிவிட்டது. சொன்னால் கேட்கவா போகிறான்.

"நோம்பீனா, அம்மாயி வீட்டுக்குத் தான் போகணும்", சொல்லிப் பார்த்தாள் அம்மா.
"அதெல்லாம் முடியாது. நான் ஆத்தா வீட்டுக்குப் போகணும்", அடம் பிடித்தான்.

தீபாவளிக்கு முதல் நாள், அவன் அப்பா, அவனை புல்லெட் வண்டியில் ஏற்றி அம்மாயி வீட்டிலிருந்து தன் வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டார். இரண்டு ஊர்களும் நான்கு மைல் தொலைவிற்குள்தான். அங்கு ஏதோ அவன் தன் அத்தை மக்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். மறுநாள் தீபாவளியன்று, காலையில் ஆறு மணிக்கெல்லாம் அங்கிருந்து திரும்ப அம்மாயி வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டார். கண்ணனுக்கென்று அவன் அம்மா புதுத்துணி வாங்கி வைத்திருந்தாள். அது ஏனோ கண்ணுக்குப் பிடிக்கவில்லை. அந்தத் துணியை உடுத்திக் கொள்ளமாட்டேன் என்று அடம். என்றுமில்லாமல், அவன் அப்பாவிற்கு அவன்மேல் கோபம் வந்தது. பாவம் அந்த குழந்தை.. வெறுமேனியுடன் நின்றிருந்த கண்ணனின் மேல் ஒரு தோல் பெல்ட்டினால் விழுந்தது சுரீர் சுரீரென்று.. கதறிக்கொண்டு ஓடிச் சமயலறையிலிருந்த அவன் அம்மாயியின் கால்களைக் கட்டிக்கொண்டான். கண்ணனுக்கு அன்று அவன் அப்பாவின் செயல் ஒரே விந்தையாயிருந்தது.

அந்தத் தீபாவளி முடிந்து ஐந்தாறு வாரங்கள் இருக்கும். அவர்களெல்லாம் ஊருக்குச் சென்றிருந்தபோது, ஈரோட்டிலில் அவர்களிருந்த வீட்டில் களவு போய்விட்டது. இரண்டு லட்சம் பெறுமானமுள்ள நகைகள், வி.சி.டி பிளேயர் இன்னும் பல பொருட்கள். போலீஸ் வந்து போய்க்கொண்டிருந்ததால், சிறுவன் பயப்படுவான் என்று, கண்ணனை அவன் பெரியப்பா தன் வீட்டிற்குக் கூட்டிப்போய்விட்டார். வீட்டில் களவுபோனதைப் பற்றிக் கண்ணனுக்குக் கவலையே இல்லை. அவன் இளந்தளிராயிற்றே!

பின் ஒரு மாதத்தில், அவன் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. ஒரே இருமல். அவன் அம்மா எவ்வளவு சொல்லியும், அவர் மருத்துவரைப் பார்க்க மறுத்துவிட்டார். ஒருநாள் இவர்களைக் காண வந்திருந்த கண்ணனின் அத்தை, தன் தனையன் நிலைகண்டு, அவரை வலுக்கட்டாயமாய்க் கோயம்புத்தூரிலுள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிட்டார். கண்ணன் அப்போது ஒன்றாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தான். அவன் அந்த ஆண்டு அரையாண்டுத் தேர்வே எழுதவில்லை. கோயம்புத்தூரிலுள்ள அவன் அத்தை வீட்டிலேயே இருந்தான். அவன் அம்மா, அம்மாயி, ஆத்தா என எல்லாரும் அவர் இருந்த ஆஸ்பத்திரியிலேயே தான் இருந்தார்கள். கண்ணனைத் தினமும் காலையில் அவன் அத்தை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுவிடுவாள். இப்படித்தான் ஒரு மாதமாகக் கண்ணனின் தினசரி அலுவல்கள்.

அன்று மருத்துவமனை வந்த அவனை அவன் ஆத்தா அழைத்தாள்.
"தம்பீ.."
"என்னங்காத்தா?"
"வா சாமீ.. உங்கொப்பனப் போய்ப் பாத்துட்டு வந்தரலாம்."
"ஐயே .. நான் வரமாட்டேன்", சிணுங்கத் தொடங்கினான், "பயமா இருக்கும்."
அவன் இங்கு வந்ததிலிருந்து அந்த ஐ.சி.யு-வினுள் ஒரே முறைதான் சென்றுள்ளான். மற்றபடி, வெளியே உள்ள பூங்காவிலோ, கேண்டீனிலோதான் இருப்பான். உள்ளே போவதென்றால், ஒரே பயம். அதுவும் அவன் அப்பாவிற்குப் பொறுத்தியிருந்த ஆக்சிஜன் டியூபு, அங்கு இருக்கும் சிறு பல்புகள் கொண்ட இயந்திரம், இவற்றைப் பார்த்தால் அவ்வளவுதான். பாவம், அவருக்கும் அவர் ஆசை மகனைப் பார்க்கவேண்டும் போல் இருந்திருக்கிறது. இந்த கிழவியிடம் சொல்லியிருக்கிறார்.
"நான் இருக்கறேனல்லோ. வா சாமீ.. உள்ள போய்ப் பாத்துட்டு வந்தரலாம்."
"நா வர்ல .."
எப்படியோ அவனை உள்ளே கூட்டிச் சென்றுவிட்டாள் அவள். உள்ளே, தூங்கிக் கொண்டிருந்த தன் மகனிடம், "டேய்.. டேய்.. இங்க பார்ரா" மெல்ல அழைத்தாள்.
கண்ணின் அப்பா விழித்து, "தம்பீ.." என்றார் மெல்லிய குரலில்.
கண்ணனுக்கு என்ன செய்வதென்றே தெரிவில்லை.
"ப்ப்ப்போலாம் .." சிணுங்கினான்.
"சேரி .. பயப்படறான்.. இரு, நாங் கொண்டோய் வெளிய உட்டுட்டு வந்தர்றேன்."

அவன் அப்பாவிற்கு ஒன்றுமில்லை. சிறு வயதிலிருந்தே இதயம் கொஞ்சம் வலிமையிழந்திருந்தது. ஆனால் சிறுவயது முதலே, அவர்தான் அந்த ஊரின் குறும்புக்காரச் சுட்டிகளில் முக்கியமானவராய் இருந்திருக்கிறார். இப்போது குடியினால், கல்லீரல் பழுதடைந்துவிட்டது. கூடவே நுரையீரலில் கோளாறு - காசநோயினைப் போல. மாரடைப்பும் வேறு. அவ்வளவுதான்.

அன்று மாலை ஒரு ஐந்து மணியிருக்கும். கண்ணன் காரின் பின் சீட்டில் அவன் அம்மாயியின் மடியிலமர்ந்திருந்தான். அருகில் அவன் அம்மா. கார் கிளம்பியது. கண்ணன் அவன் தாயிடம் கேட்டான், "அவுரு எங்கம்மா?".
"..", மௌனம்.
அவளுக்கு புரியவில்லையோ என்று நினைத்துக்கொண்டு, தன் கேள்வியினைத் தெளிவாகக் கேட்டான்.
"அப்பா எங்கம்மா?"
மௌனம்.
அப்படியே தூங்கிவிட்டான்.

கார் அவன் அப்பாவின் சொந்த ஊருக்குள் நுழைந்தது. அவன் ஆத்தா வீடு என்று ஆசையுடன் அழைக்கும் அந்த வீட்டின் கேட்டினுள் நுழைந்ததும், காரில் இருந்த அனைவரும் அழத் தொடங்கினார்கள். கண்ணணுக்கு ஒன்றுமே புரியவில்லை.
"ஏம்மா அழுவறீங்க?"
அழுகை தொடர்ந்தது.

அதன்பின் அந்த மச்சு வீட்டின் திண்ணைகளிலும், தொட்டியிலும், சமயலறையிலும் அலையத் தொடங்கினான். ஒரு எட்டு மணியிருக்கும். கண்ணன், ஆசாரத்தின் எதிர்ப்புறம் இருக்கும் திண்ணையருகிலுள்ள, அவன் பெரியப்பா அறையின் கதவின் நிலவைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான். அப்போது சைரன் போட்ட ஆம்புலன்சில் இருந்து ஒரு நீளமான துணிக்கட்டினைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். எதிரில் இருந்த ஆசாரத்தில் அழுகை வலுத்தது. நடுவில் இருந்த தொட்டியில், அந்த ஊரின் வண்ணான், நாவிதன், பறையன், இன்னபிற தொழிலாளி வீட்டுப் பெண்களெல்லாம் நின்று அழுதுகொண்டிருந்தார்கள். அப்போது தான், ஆம்புலன்சில் வந்திருந்த அவனது அத்தை மகன், அந்தச் சேதியைச் சொன்னான். அவனும் சிறுவன்தான். ஆனால், கண்ணனைவிட ஒரு இரண்டு ஆண்டுகள் மூத்தவன்.
"கண்ணா.."
"என்னங் மச்.." இப்படித்தான், முழுதாக மச்சான் என்று கூப்பிடாமல் விழுங்கி விடுவான்.
"அங்க தூக்கிட்டு போறது உங்க அப்பாடா.."
கண்ணனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மெல்ல ஒரு புன்னகையை உதிர்த்தான்.
"செத்துப் போய்ட்டாங்கடா..", மச்சான்.
"ஓஹோ"
கண்ணன் மீண்டும் வீட்டினைச் சுற்றிவரத் தொடங்கினான். பிணம் வைத்திருந்த ஆசாரத்தின் பக்கம் அவன் போகவே இல்லை. ஆனால், கண்ணனுக்கு மனதினுள் ஒரு சிறு அச்சம். எங்கோ உடன்கட்டை ஏறுவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான் போலும். அதனால்தான்! அப்பா இல்லையென்றால், இனி அப்பாவின் தாயான ஆத்தா, அப்புறம் அவன் அத்தைகள், அத்தை மக்கள், இவர்களை எல்லாம் பார்க்க முடியாதோ என்ற ஆதங்கமும் கூட. உள்ளே உள்ள அச்சத்தைக் காட்டி கொள்ளாதவனாய் ஓடித்திரிந்திருந்தான்.

காலையில் சடங்குகளெல்லாம் முடிந்தபிறகு, பிணத்தை எடுக்க (எரிக்க) ஆற்றங்கரைக்குக் கொண்டு சென்றார்கள். தெருமுனையுடன் பெண்களெல்லாம் அழுகையுடன் நின்றுவிட்டார்கள். கண்ணனின் மனதில் அச்சம் சற்றே ஓய்ந்தது. கண்ணனை அவன் பெரியப்பாதான் கைப்பிடித்து அழைத்துச் சென்றார். கூடவே மச்சானும், தங்கையான பெரியப்பா மகளும். நாவிதன்தான் கண்ணனையும், தண்ணீர்ப் பானையையும் தூக்கிக்கொண்டு பிணத்தைச் சுற்றி வந்தான். முகத்தை மூடுமுன், அங்கிருந்த பெரியவர்களெல்லாம், "அப்பா மொகத்தப் பாத்துக்க சாமி.." என்றார்கள். அவன் தன் தந்தையைக் கடைசியாகப் பார்க்கிறோமே என்ற கவலையே இல்லாதவனாய், சற்றே அந்தப்பக்கம் பிணத்தை நோக்கி ஒரு பார்வை பார்த்தான்.

கொல்லி வைத்த பின்னர், "மொட்டை அடிச்சுக்கறயா?", பெரியப்பா கேட்டார்.
"ம்ம்ஹூம்ம் .. மாட்டேன்", என்றான்.
குழந்தையை யாரும் கட்டாயப் படுத்தவில்லை. ஏதோ சாங்கியம் என்று வேறு மூன்று பேர் மொட்டை அடித்துக் கொண்டார்கள்.

இருபத்தொரு நாட்கள் அங்கேயே ஆத்தாவுடன் இருந்துவிட்டான். "தினமும் இரண்டுவேளை சூடம் பற்றி சாமிகும்படணும்" என்று. அதன்பின், மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினான், அழுகை ஏதுமில்லாமல். காலையில் அழுவதுதான் எல்.கே.ஜி-யுடன் முடிந்துவிட்டதே!
பள்ளியில், சரண்யா கேட்டாள், "கண்ணா, உங்க அப்பா செத்துப் போய்ட்டாங்களாமே?"
எங்கோ கண்ட நிகழ்ச்சியைப் பேசுவதைப் போல, "ஆமா.. ஹார்ட் அட்டேக்..", என்றான் புன்னகையுடன். அதற்கு என்ன தெரியும், இளந்தளிராயிற்றே!

1 comment:

Ragupathy said...

I don't think there is any better way to express than writing.

Night ellam kannu mulluchu eluthathe. Take care.

-Ragu