Monday, November 15, 2010

சின்னக் கண்ணன்

1


கண்கள் .. இவை ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப் பெற்ற வரங்களாம். இவை கருப்பு வெள்ளையாயினும், எண்ணிலடங்கா நிறங்களைக் காணச்செய்யும் தன்மையன. மூளைக்கு எல்லா நிகழ்வுகளையும் படம் பிடித்துக் கொடுக்கும் கேமராக்கள் இவை. இப்படித் தான் கண்ணனின் கண்களும் அவனுக்கு எண்ணற்ற அனுபவங்களையும் நிகழ்வுகளையும் படம் பிடித்துக் கொடுத்தன. தமிழகத்தின் ஒரு மூலையில் காவிரியாறு சமவெளிப் பகுதிகளைச் சற்றே எட்டிப் பார்க்கத் தொடங்கும் இடத்தில்தான் ஈரோடு என்ற சிறிய நகரம் உள்ளது. அந்நகரைச் சுற்றியுள்ள பல கிராமங்களைப் போல் தான் கண்ணனின் ஊரும். என்னதான் பிளசர் காரில் ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டு, ஒரு வேலையாள் ஓட்டப் பெயர் சொன்ன இடத்தில் இறங்கிக் கொள்ளும் வசதி படைத்திருந்தாலும், ஏதோ காலத்தின் கட்டாயத்தில் பள்ளத்தில் விழுந்து வசதிகள் போய்விட்டால், நடந்தோ, நகரப் பேருந்திலோ செல்லும் துணிவும், சிக்கனமாகக் குடும்பம் நடத்தித் தங்கள் பிள்ளைகளை நல்ல நிலைக்குக் கொண்டு செல்லும் விவரமும் நிறைந்தவர்கள் கவுண்டன்மார் வீட்டுப் பெண்கள். பொன்னிற்கு ஈடாக விலை போகும் மஞ்சள் நன்கு விளையும் நிலங்களை உடையவர்கள் கவுண்டன்மார்கள். அப்படி ஒரு குடும்பத்தில் பிறந்தவன்தான் கண்ணன்.

'வீட்டுக்கு ஒரு பிள்ளை' என்ற கோட்பாடு பிரபலமாய் இருந்த அந்தக்காலத்தில்தான் கண்ணன் பிறந்தான். ஆம், அவன் ஒரே பிள்ளை. அவன் தந்தையும் தாயும், அவன் படிப்பிற்காக, அவன் சிறியவனாக இருந்த போதே ஈரோட்டிற்கு வந்து விட்டார்கள். அவன் அப்பாவிடம் செல்லம் அதிகம். அப்பாவின் நெஞ்சில் ஏறித்தான் இரவில் தூங்குவான். அவன் தாயோ அவ்வளவாகச் செல்லம் இல்லை. காலையில் பள்ளிக்குச் சென்றிருப்பான் கண்ணன்; அவனது அப்பாவிற்குக் திடீரென்று அவனைப் பார்க்க வேண்டும் என்றிருந்தால், உடனே ஒரு பொட்டலம் சாக்லேட் மிட்டாய் வாங்கிக்கொண்டு, தன் புல்லெட் வண்டியில் அவன் பள்ளிக்குக் கிளம்பிவிடுவார். அவ்வளவு பாசம் அவன்மேல். அவன் அப்பாவிற்குப் பெரிய வேலை எல்லாம் ஒன்றும் கிடையாது. தமது ஊரில் உள்ள பரம்பரை நிலத்தைப் பார்த்துக்கொள்வதுதான்.

கண்ணன் ஒன்றும் பெரிய சுட்டியல்ல. வகுப்பில் இருக்கும் இடம் தெரியாது. அவ்வளவு அமைதி. அவன் எல்.கே.ஜி வகுப்பில் படிக்கும் போது காலையில் பள்ளிக்கூட வேனில் ஏற்றி அனுப்புவதற்குள் பெரும் பாடாகி விடும். அழுது அடம் பிடித்து ஊரைக் கூட்டிவிடுவான். இப்படித்தான் ஒரு நாள் அவன் அப்பா வழிப் பாட்டி அங்கு வந்திருந்தாள். அவளை 'ஆத்தா' என்று தான் இவன் அழைப்பான். கண்ணன் உறவுமுறை கொண்டு கூப்பிடும் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருள் அந்தக் கிழவியும் ஒருத்தி. மற்றவர்களை எல்லாம் 'ஏனுங் ..' 'வாங் ..' 'போங் ..' .. அவ்வளவுதான். ஏதோ ஒரு கரிசனத்தில், அன்று கண்ணனைக் கிளப்பி அனுப்பும் பொறுப்பை அவள் ஏற்றுக் கொண்டாள்.
"தம்பீ .. ", அப்படித்தான் அவள் கண்ணனை அழைப்பாள்.
"என்னங் ஆத்தா?"
"சாப்படலாம் வா"
"எனக்கு வேணாம் .."
"சாமி சாமியல்லோ .. வேண்டாம்னு சொல்லக்கூடாது. சீக்கரமா சாப்டுட்டு ஸ்கூலுக்கு போக வேணும். அப்பறம், உங்கொப்பன் நான் வந்துதான் நீ சாப்பட மாட்டீங்கறேனு சொல்லுவான். சாப்புடு சாமி."
இப்படி எல்லாம் ஏதோ சொல்லிச் சாப்பிட வைத்துவிட்டாள். பள்ளி வேன் வந்து ஆரன் அடித்துக் கொண்டு இருந்தது. எப்போதும் போல் அழுது ஊரைக் கூட்டி விட்டான். அவனுக்குப் பள்ளிக்குப் போவதே பிடிக்காது. வீட்டில் இருக்கும் விளையாட்டுச் சாமான்களோடு, சிறு சிறு எலெக்ட்ரிக் ப்ளக், கூழாங்கல், சிறிய சதுரமான மரக் கட்டைகள் - இவற்றைக் கொண்டு கோயிலில் சாமி வைத்தோ, பஸ் ஒட்டியோ விளையாடுவான். அதை விட்டால், பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோடு சிறிது நேரம் சைக்கிள் ஒட்டிக் கொண்டிருப்பான். எல்.கே.ஜி படிக்கும் வரை, பள்ளியில் அடிக்கடி மதியம் சாப்பிடும்போது வாந்தி எடுத்து விடுவான்; அவன் பள்ளியில் மதிய உணவிற்குப் பின் எல்லாக் குழந்தைகளையும் உறங்க வைப்பது வழக்கம். அப்படி உறங்கும்போது சிறுநீரோ மலமோ கழித்து விடுவான். அந்தச் சிறுவனுக்குள் அப்படி என்னதான் அச்சம் உண்டானதோ தெரியவில்லை. பள்ளி என்றால், அவனுக்குக் குலையே நடுங்கிவிடும். அவனுக்குப் பள்ளியில் விளையாடுவதென்றால், ஏதோ ஒரு இனம் புரியாது அச்சம் வந்துவிடும். மற்ற குழந்தைகளெல்லாம் சருக்கலிலோ ஊஞ்சலிலோ விளையாடும்போது, இவன் மட்டும் தனியே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். மாலையில் வீட்டிற்கு வந்தால், அவன் அம்மா அவனை ஆசையாக வேனில் இருந்து எடுத்து அணைத்துக் கொண்டு வருவாள். பின்னர், துணி மாற்றிக்கொண்டு அவனது விளையாட்டுச் சாமான்களுக்கு உயிர் கொடுக்கத் தொடங்கிவிடுவான். வெயில் போன பின்பு, சைக்கிள். அவன் தந்தை ஊரில் விவசாய நிலங்களைப் பார்த்துக் கொள்வதற்காகக் காலையில் போனால், மலையில் ஐந்தாறு மணிக்குத்தான் திரும்புவார். வந்தபின், உணவு எல்லாம் முடித்துக் கொண்டு ஒரு எட்டு மணிவாக்கில் கண்ணனையும் அந்த புல்லெட் வண்டியில் முன்னே அமர்த்திக்கொண்டு வெளியே சென்றுவிடுவார். கண்ணன் அங்குள்ள ஆம்லெட் கடையில் முட்டை தின்றுகொண்டிருப்பான். அவரோ பக்கத்துக் காம்ப்ளசில் உள்ள வைன் ஷாப்பில் தேவையான அளவிற்கு ஏற்றிக்கொண்டு வருவார். அவனுக்கு எதற்கு அங்கு வருகிறோம் என்று கூடத் தெரியாது. முட்டை தின்பதில் மும்முரமாக இறங்கி விடுவான். இப்படித் தான் கண்ணனின் வாழ்க்கை ஓடியது.

வாரம் முடிந்து விட்டால், கண்ணனை அவன் அம்மாவின் அம்மா வீட்டிற்குக் கூட்டிப்போய் விடுவார்கள். அங்கு தான் சனி ஞாயிறுகளைக் கழிப்பான். அங்கு போய்விட்டால், வெகு செல்லம். அவன் அம்மாயி (அம்மாவின் அம்மா) அவன் கேட்டதெல்லாம் செய்து கொடுப்பாள். அவனும் "அம்மாயி அம்மாயி .." என்று அவள் பின்னேயே திரிவான். ஆனால், தனது தாத்தாவைக் கண்டால், அவனுக்கு ஏதோ ஒரு பயம். "தாத்தா" என்று ஒரு முறை கூட அழைத்தது கிடையாது. அங்கு வாசலில் மணல் கொட்டி வைத்திருப்பார்கள். அதில் விளையாடிக்கொண்டிருப்பான். அவன் தாத்தா காரில் வரும்போது, தெரு முனையில் ஆரன் அடிப்பதுண்டு. யாராவது கார் வருவது தெரியாமல் ரோட்டில் வந்து விடுவார்களே என்ற எச்சரிக்கையில்தான். அந்தச் சத்தம் கேட்டால், மணலில் விளையாடிக்கொண்டிருந்த கண்ணன், நொடியில் உள்ளே ஓடி விடுவான்.

ஊருக்குச் செல்லாத வார இறுதிகளில், ஞாயிற்றுக் கிழமைகளில், வீட்டில் அசைவம் சமைப்பது வழக்கம். அனால், கண்ணனின் தாய் அசைவம் சாப்பிட மாட்டாள். ஏன் .. தொடக்கூட மாட்டாள். அவன் அப்பாதான் கறியைக் கழுவிச் சட்டியில் போடுவார். அவன் அம்மா அதைக் கிளறி விட்டுத் தொடாமல் சமைப்பாள். ஆட்டுக்கறிக் கொழுப்பும், சூப்பு எலும்பினை (சூப்பு என்றால் குடிக்கும் சூப்பு அல்ல. ஆட்டுக் கால் எலும்பில் உள்ள சாற்றை உறிஞ்சி உண்பதால், அதனைச் சூப்பு என்கிறார்கள் இப்பகுதியில்) உறிஞ்சிச் சாப்பிடுவதும் கண்ணனுக்குப் பிடிக்கும். ஆட்டு மூளையும் விரும்பிச் சாப்பிடுவான். அவன் அம்மாயி வீட்டில் கிடாய்ப் பொங்கல் வைத்தால், அவனுக்காக ஆட்டின் மூளையைத் தனியாக எடுத்து வறுத்து வைப்பாள் லட்சுமி அக்காள். அங்கு தோட்டத்தில் வேலை செய்யும் பலருள் அவளும் ஒருத்தி.

இப்படித்தான், அவன் குழந்தைப் பருவம் ஓடியது. எந்தக் கவலையும் இல்லை அவனுக்கு. ஏதோ வாழ்க்கை என்பது தட்டிக் கொடுத்து உறங்க வைப்பதும், பிடிக்கவில்லை என்றாலும் பள்ளிக்கு போவது போன்ற சில (உண்மையில் அது ஒன்று தான் அவனுக்குப் பிடிக்காது) கெட்ட கனாக்களும் நிறைந்தது என்று தான் நினைத்துக் கொண்டிருந்தான் கண்ணன்.

(தொடரும்)

No comments: