Sunday, February 05, 2012

மழைமேகம்

கண்ணனுக்கு அவன் பெரியம்மா நல்ல உடல் நலத்தோடு இருந்தபோதிலெல்லாம் அவ்வளவாக ஒன்றும் பாசம் இருந்ததில்லை. அவள் தன் தாயுடன் பிறந்தவள். கண்ணனின் அம்மாவிற்கு சுமாராகத்தான் படிப்பு வரும் என்றாலும், அவள் பொருளியலில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருந்தாள். அவன் பெரியம்மா நன்றாகப் படிப்பாள். இருப்பினும் நல்ல மாப்பிள்ளை வந்ததென்று, பி.எஸ்சி படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டார் கண்ணனின் தாத்தா. அவன் பெரியம்மாவிற்கு இரண்டு மகள்கள் தான்; தவமிருந்து மூன்றாவதாகப் பெற்ற மகன் சிறு வயதிலேயே இறந்துவிட்டான். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்து நிம்மதியாய்க் காலம் கழித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் தெரியவந்தது அவளுக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தது. புற்றுநோய் என்பது ஒன்றுமல்ல - உடலில் நன்றாக இருக்கும் உயிரணுக்கள் (செல்கள்) ஏதோ வேதியல் மாற்றத்தினால், கட்டுபாடின்றிப் பெருக்கமடைவதுதான்.

கண்ணன் கல்லூரியில் இறுதியாண்டு முடிக்கப்போகும் நேரம் அது. தேர்வுகள் எல்லாம் முடிந்து இறுதியாண்டுத் திட்டப்பணி ஆய்வுரை மட்டும் மீதமிருந்தது. அவன் முதன் முதலாய்ப் பெரியம்மா என்று அவளை அழைத்தது அப்போது தான்.

"எண்ணங் பெரிம்மா ...", கண்ணன் தொலைபேசியில்.
"நல்லா இருக்கியா கண்ணா?", மறுமுனையில் பெரியம்மா.
"நல்லா இருக்கங் பெரிம்மா"
"எக்சாம்ஸ் எல்லாம் நல்லா பண்ணி இருக்கியா?"
"நல்லா பண்ணீருக்கேங் பெரிம்மா. உங்களுக்கு ஒடம்புக்கு பரவால்லயாங்?"
"ம்ம் .. எனக்கு பரவால்லையா இருக்குது. கொஞ்சம் முன்னாடியே கண்டுபிடிசிருந்தா, இன்னும் ஈசியா ட்ரீட் பண்ணி இருக்கலாம்னு சொல்றாங்க. ஆனா இப்போ கூட நாட் டூ லேட்."
"ஆமாங் பெரிம்மா. மிட்-பார்டீஸ்ல இருக்கற எல்லாரும் வருஷம் ஒரு தடவ செக்-அப் பண்ணிக்கறது நல்லதுன்னு சொல்றாங்க."
"அப்பறம், நீ எப்போ ஊருக்கு வர்ற?"
"இன்னும் ப்ராஜெக்ட் வைவா இருக்குங் பெரிம்மா. மே டென்த் முடிஞ்சதுக்கப்பறம் வர்றனுங் பெரிம்மா. நீங்க எப்போ சென்னை வர்றீங்?"
"நானும் பெரிப்பாவும் பதிமூனாந் தேதி வர்றோம்."
"அம்மா சொன்னாங் பெரிம்மா, வீடு ஒன்னு பாக்க சொல்லி."
"ஆமா கண்ணா. ஒரு மூணு மாசம் மட்டும் தங்கற மாதிரி இருந்த போதும். டைம் இருந்தாப் போய்ப் பாரு."
"செரிங் பெரிம்மா.. இந்த வீக்எண்டு போய்ப் பாக்கறங் பெரிம்மா."

கண்ணனின் தாய் ஏற்கனவே சொல்லி இருந்தாள், சிகிச்சைக்காகச் சென்னை வரும் அவன் பெரியம்மாவிற்கு சிறியதாக ஒரு வீடு பார்க்கச் சொல்லி. அவள் சிகிச்சைக்காக வரும் அடையாற்றுப் புற்றுநோய் சிகிச்சை மையம் இருந்தது கண்ணனின் கல்லூரி அருகில்தான். அந்தப் பகுதியிலேயே வீடு பார்க்கப் போனான் அந்த வார இறுதியில்.

கேட்கப் போன இடத்திலெல்லாம், "சீக்காளிங்களுக்கெல்லாம் வீடு தரமாட்டோம்" என்று மறுத்து விட்டார்கள். அங்கே ஓரிடத்தில், புற்றுநோய் சிகிச்சைக்காக வருபவர்களுக்கென மிகச்சிறிய வீடுகள் மாத வாடகைக்கு விடுவார்கள் எனக் கேள்விப்பட்டான்.

"பெரிம்மா .. கேக்கற எடத்துல எல்லாம் மூணு மாசம்னா, வாடகைக்கு விடமாட்டோம்னு சொல்றாங் பெரிம்மா", சமாளித்தான் கண்ணன்.
"செரி பரவால்ல கண்ணா. அங்க கேன்சர் இன்ஸ்டிடியூட்டுக்கு வர்ரவங்களுக்கு விட்றதுக்குனே சின்ன ரூம்ஸ் இருக்காமே. அங்க கேட்டுப்பாரு", பெரியம்மா சொன்னாள்.

எப்படிச் சொல்வதென்று இருந்த கண்ணனுக்கு இப்போதுதான் உயிர்வந்தது. அங்கேயே வீடுபார்த்து விட்டு, முன்பணம் எல்லாம் கொடுத்து விட்டான் கண்ணன்.

சிகிச்சைக்காக வந்திருந்த அவன் பெரியம்மாவை அந்த வீட்டில் அமர்த்துவதற்காக அவன் கல்லூரி வேலை எல்லாம் முடிந்தபின் நான்கு நாட்கள் அங்கேயே இருந்தான். பெரியப்பாவும் பெரியம்மாவும் வந்தபின், அவர்களைப் குடியமர்த்தி, அவர்களுக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொடுத்துவிட்டு, அவன் பெரியப்பாவிற்கு அருகிலுள்ள கடைகளையெல்லாம் காட்டிவிட்டுப் பின் ஊருக்குக் கிளம்பினான்.

--------

மூன்று மாதங்கள் சிகிச்சை. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கதிர்வீச்சு சிகிச்சையும் (radiation) தொடர்ந்து கீமோத்தெராப்பி (chemotherapy) எனும் வேதிப்பொருள் கொண்டு செய்யும் சிகிச்சையும் செய்ய வேண்டும். இடைப்பட்ட நாட்களில் ஊருக்கு வருவாள் பெரியம்மா. கதிர்வீச்சு சிகிச்சையினால் உடலில் ஏற்படும் வெப்பம் அது முடிந்து நான்கு நாட்கள் வரை அவளைப் படாத பாடு படுத்திவிடும். உண்பதெல்லாம் வாந்தியாவதும், உடல் சோர்வாகவே இருப்பதும் பார்க்கப் பாவமாக இருக்கும். அதன் பின் பத்துநாட்கள் நன்றாக இருப்பாள். அப்போதுதான் பார்க்க வருபவர்களிடம் வாய் கொடுத்துப் பேசுவாள்.

"பெரிம்மா .. கவலப்படாதீங் பெரிம்மா. இந்த காலத்துல இதெல்லாம் ரொம்ப காமன். மெடிசின்ஸ் எல்லாம் ரொம்ப இம்ப்ரூவ் ஆயிருச்சு. சீக்கரம் நல்லாயிரும்", ஏதோ பெரிய மனிதன் போல் ஆறுதல் கூறினான் கண்ணன்.
"ஹ ஹ ..", மெல்லச் சிரித்தாள் பெரியம்மா. "ஆப்பிள் சாப்பிடு கண்ணா", மேஜை மேல் இருந்த ஆப்பிளை அரிந்து கண்ணனுக்குக் கொடுத்தாள்.

--------

மூன்று மாதங்கள் கழிந்தன..
கண்ணனும் அப்போது வேலைக்குச் சேர்ந்திருந்தான். பெரியம்மாவும் நலம் பெற்றிருந்தாள் - இல்லை, நலம் பெற்றவள் போல் தோற்றம் பெற்றிருந்தாள்.

ஓராண்டு கழிந்தது..
பெரியம்மா முழுவதுமாய் நலம் பெற்றுவிட்டாள். அவளுக்குப் புற்றுநோய் இருந்த அறிகுறியே இல்லாததுபோல் மாறிவிட்டது. அப்போதுதான் ஒருநாள்,

"கடைவீதில இருந்தப்போ என்னமோ முதுகுல சுரீர்னு வலிச்சுது. என்னனு தெரியல. இதுவரைக்கும் பேக்பெயின் வந்ததே இல்ல", பெரியம்மா சொன்னாள்.
"வயசு ஆனா வரத்தான் செய்யும். கொஞ்சம் அலையறத கம்மி பண்ணிக்கோங்க", அவளது பெரிய மகள் அல்லி. அவள்தான் ஏதாவது ஒன்றென்றால், பெரியம்மாவை அருகிலிருந்து பார்த்துகொள்வாள். 

இப்படி ஏதோ சாதாரணமான இடுப்புவலி என்றுதான் முதலில் நினைத்திருந்தார்கள். மூன்று மாதங்கள் கழிந்த பின்னர்தான் தெரியவந்தது புற்றுநோய் எலும்புகளிலும் பரவியிருந்தது. இந்த முறை கோயம்புத்தூரிலேயே சிகிச்சை அளித்துவிடலாம் என்று முடிவு செய்தனர்.

மீண்டும் மூன்று மாதங்கள் சிகிச்சையில் ஓடின. நலம் பெற்றிருந்தாள் பெரியம்மா.

இம்முறை சிகிச்சை நடக்கும்போது மகள் அல்லி பெரியம்மா வீட்டிற்குக் குடிபெயர்ந்துவிட்டாள். அவள் அங்கேயே தங்க ஆரம்பித்தது, பெரியம்மாவிற்குப் பெரிய ஆதரவாக இருந்தது.

--------

சிகிச்சை முடிந்து ஆறு மாதங்கள் ஓடின. கண்ணன் பெங்களூரில் வேலையில் இருந்தான். கண்ணன் ஊருக்குப் போகும்போதெல்லாம் தன் பெரியம்மாவைக் காணச் செல்வான். இப்போதெல்லாம் உடல் நலத்தில் பெரிதும் குறை ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

நல்ல காய்கறிகள், பழங்கள், பருப்பு, அளவான புலால் என சத்தான சமச்சீர் உணவு உண்டு வந்தாள் பெரியம்மா. காய்கறிகள், பழங்கள், கீரைகள் நிறைந்த உணவு புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. இவற்றில் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்கள் (anti-oxidants) மிகுந்து காணப்படுகின்றன. இவை உடலில் உள்ள உயிரணுக்களில் உயிர்வளியேற்றத்தைத் (oxidation) குறைக்கின்றன. உணவு, உடற்பயிற்சி, வீட்டு வேலை என்று அனைத்திலும் சீரான ஈடுபாட்டுடன் இருந்து வந்தாள் பெரியம்மா.

அன்று ஒருநாள் வார இறுதியில் ஊருக்குச்சென்ற போது அவளைக் காணச் சென்றிருந்தான்.
"வா கண்ணா", வெளியே நடந்து கொண்டிருந்த பெரியம்மா கண்ணன் வருவதைக் கண்டு வீட்டுக்குள் அழைத்தாள், "வாக்கிங் போயிட்டு இருந்தேன்."
"நல்லா இருக்கீங்களா பெரிம்மா?", கண்ணன் விசாரித்தான்.
"நல்லா இருக்கேன்."
"பெரிப்பாவ காணோம்?"
"பால் வாங்கீட்டு வரப் போனாங்க. வந்துருவாங்க. டெய்லியும் சாயங்காலம் அஞ்சு மணிக்கு அது பெரிப்ப டியூட்டி. உள்ள வா கண்ணா...", வாசலில் இருந்து கண்ணனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.
"அம்மா வரலையா?", பெரியம்மா.
"இல்லீங் பெரிம்மா. அம்மா ஏதோ பங்ஷன் இருக்குனு அங்க போய்ட்டாங்க."

அவனை அங்கே உட்கார வைத்துவிட்டுப் பூஸ்ட் கலக்கிக் கொண்டுவந்தாள். கண்ணனும் குடித்துக் கொண்டே பேசினான்.
"இப்போ எல்லாம் உடம்புக்குப் பரவால்லயாங் பெரிம்மா?"
"ஒன்னும் பிரச்சனை இல்ல. டிரீட்மென்ட் முடிஞ்சதுக்கு அப்பறம் நல்லா இருக்கு. உனக்கு வேலை எல்லாம் நல்லாப் போகுதா?"
"நல்லா போகுதுங் பெரிம்மா. அக்காவ காணோம்?"
"அக்கா வேலைக்கு போயிருக்கா", கொஞ்சம் கோபமான குரலில்.
"ஓ ஓகே .."
"இங்க இருக்கறது பத்தாதுன்னு வேலைக்கு வேற போய் சம்பாரிக்கரா. வீட்டோட இருன்னு சொன்னா கேட்கமாடேங்கரா."
"அக்கா டீச்சிங் ப்ரோபெசன ஒரு சர்வீஸ் மாதிரி செஞ்சுட்டு இருக்காங்க. ஸ்கூலுக்கு தானே போறாங்க. போயிட்டு போறாங்க", அல்லி வேலைக்குச் செல்வதை ஆதரித்துப் பேசினான் கண்ணன்.
பெரியம்மா ஒன்றும் சொல்லவில்லை.

சிறிது நேரம் கழித்து அல்லி வந்தவுடன், மீண்டும் கண்ணனுடன் பேசத் தொடங்கினாள்.
ஏதோ கேள்வி கேட்டாள், "மேரி குயூரி கான்செர் வந்துதான செத்துப் போனாங்க?"
கண்ணன் ஏதோ அவன் அறிவை அவள் சோதிக்கக் கேட்கிறாள் என்று, "தேரீலயேங் பெரிம்மா.."
"மேரி குயூரி தான ரேடியேசன கண்டுபிடிச்சது?", கேள்வி கேட்டாள் பெரியம்மா.
"ஆமாங் பெரிம்மா. அவங்களும் அவங்க ஹஸ்பன்டு பியரி குயூரியும் தான் ரேடியம் ரேடியேசன் எல்லாத்தையும் கண்டுபிடிச்சாங்க", கண்ணன் தன் பொது அறிவை எல்லாம் பெருமையுடன் வெளிக்காட்டினான்.
"அவங்க எப்படி செத்தாங்கனு தெரியுமா உனக்கு?", மீண்டும் கண்ணனின் அறிவை சோதித்தாள் பெரியம்மா.
"ஏதோ ரெடியேசன் எபெக்ட்ல தான் எறந்தாங்க."
"அப்பிடீன்னு ரேடியேசன் குடுத்தவங்கள எப்பிடி பாத்துக்கணும்? நல்ல பாத்துக்கணும்."
"..."
"உங்க அக்காவுக்கு இதெல்லாம் எங்க புரியுது. வேல வேலன்னு சுத்தவே நேரம் செரியா இருக்குது அவளுக்கு."
இப்போது தான் கண்ணனுக்கு அவளது பேச்சின் நோக்கம் புரிந்தது. கண்ணன் சத்தமின்றி வாயடைத்து அமர்ந்திருந்தான்.
அதற்குள் அல்லி குறுக்கிட்டாள், "அம்மா .. சாப்பிடுங்க" என்று சொல்லி ஒரு தட்டில் உணவை எடுத்து வைத்தாள். அல்லியைத் திட்டிக் கொண்டே அந்தத் தட்டில் இருந்த மூன்று இட்லிகளை முடித்தாள் பெரியம்மா.

எட்டு மணிக்கெல்லாம் தூங்கச் சென்று விடுவாள் அவள். அவள் தூங்கச் சென்றதும், அல்லியும் கண்ணனும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
"இப்போவெல்லாம் ரொம்ப இன்செக்யூரா பீல் பண்றாங்கடா கண்ணா. என்ன எப்போ பாத்தாலும் திட்டிட்டே இருக்காங்க. என்ன மட்டும் தான்."
"பாவம், ட்ரீட்மென்ட்ல ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. அதான் கா."
"ஆமா. ஏதோ ப்ரைன்ல கேன்சர் வந்த மாதிரி, இப்பிடித்தான் பேசிட்டே இருக்காங்க."
"ம்ம் .. பாவம்"
"நம்ம கிட்ட எல்லாம் சொன்னாப் பரவால்ல. சங்கர் கிட்ட போய் சொல்லி இருக்காங்க, உங்க அம்மா என்னப் பாத்துக்கறதே இல்லன்னு. அவன் சின்னப்  பையன் பாவம்", தன் மகனிடம் சொன்னதைக் கண்ணனிடம் குறைகூறிக் கொண்டிருந்தாள் அல்லி.

--------

இன்னும் சில மாதங்கள் ஓடியிருந்தன. கண்ணனுக்கு வெளிநாட்டில் வேலை மாற்றுதல் ஆகியிருந்தது. இன்னும் இரண்டே வாரங்களில் கிளம்பப் போகிறான்.

ஊரில் வெயில் அதிகம் என்பதால், சின்ன மகள் கயலின் வீட்டில் சிலநாட்கள் தங்கி வரலாம் என பெங்களூர் வந்திருந்தாள் பெரியம்மா. கயல் காலை எட்டு மணிக்கெல்லாம் வேலைக்குச் சென்றுவிடுவாள். அதன் பின்னர், வீட்டில் வேலை செய்யும் லட்சுமிதான் பெரியம்மாவைப் பார்த்துக் கொள்வாள். கண்ணன் வேலைநாள் ஒன்றின் மதிய வேளையில் பெரியம்மாவைக் காணக் கயலின் வீட்டிற்குச் சென்றிருந்தான். 

"அம்மா தூங்கிட்டு இருக்காங்க. பத்து மணிக்கு சாப்டுட்டு ஒரு சின்ன தூக்கம் போடுவாங்க. அப்பறம் ஒரு பன்னெண்டு மணிக்கு லன்ச்", லட்சுமி சொல்லிக் கொண்டிருக்கும் போதே பெரியம்மா எழுந்து வந்தாள். அவள் முன்பு போல் இல்லை. தள்ளாடிய நடை.
"வா கண்ணா..", அமைதியான குரலில் கண்ணனை அழைத்தாள், "சாப்டயா?", விசாரித்தாள்.
"இல்லீங் பெரிம்மா. இனிமேல் தான்."
"லட்சுமீ.. கண்ணனுக்கு சாப்பாடு போடு", பெரியம்மா ஏவல் புரிந்தாள்.
"நீங்க சாப்பிடுங்க அக்கா. கண்ணனுக்கு புளிக்குழம்பு ரெடி ஆயிட்டு இருக்கு", லட்சுமி.

தட்டில் போட்டு வைத்த சோற்றில் சிறிது சாம்பார் விட்டுப் பிசைய முயற்சித்தாள் பெரியம்மா.
"நான் பெசஞ்சு வெக்கறேன். இருங்கக்கா", லட்சுமி பிசைந்து வைத்தாள்.
அமைதியாய் சாப்பிடத் தொடங்கினாள் பெரியம்மா. அவளால் சோற்றினை அள்ள முடியவில்லை; கை உதறியது.
அதைக் கண்ட லட்சுமி, "நான் ஊட்டி விடறேன். இருங்கக்கா", என்று சோற்றினை ஊட்டி விட்டாள். பாதி முடித்த நிலையில், போதும் என்று கை அசைத்தாள் பெரியம்மா.
"இருங்கக்கா. இன்னும் ஒரே ஒரு வாய். நல்ல சாப்பிடுறதே இல்ல. சாப்பிட்டா தானே ஒடம்புல தெம்பு இருக்கும்", ஒரு குழந்தைக்கு ஊட்டுவது போல் ஊட்டிவிட்டாள் லட்சுமி.

கண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.
'நல்லாத்தானே இருந்தாங்க .. என்ன ஆச்சு? திரும்பவும் எதாவது எடத்துல பரவிருச்சா?', அவன் மனதுக்குள் ஏதோ எண்ணங்கள் ஓடின.

--------

கண்ணன் வெளிநாடு கிளம்புமுன் நான்கு நாட்கள் ஊருக்குச் சென்றிருந்தான். அப்போது பெரியம்மா திடீரென்று மயங்கிவிட்டாள் என்று பெங்களூரில் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்து இருந்தனர். இப்போது தான் தெரிந்தது அவளது புற்றுநோய் அவளது மூளையை பாதித்துள்ளது என்பது. எல்லோருக்கும் அதிர்ச்சி.

புற்றுநோய் உயிரணுக்கள் தம் இருப்பிடத்திலிருந்து அவற்றின் ஒத்த இருப்பிடங்களில் பரவும் தன்மையனவாம். மார்பகத்தில் தோன்றும் புற்றுநோய் உயிரணுக்கள், மார்பகத்தைப் போலவே சுண்ணாம்புச்சத்து மிகுந்த எலும்புகளுக்குப் பரவுகின்றன. எலும்புகளும் மூளையும் பிறப்பால் ஒரே செல்லில் இருந்து தொன்றுவனவாம். அந்தத் தொடர்பினால் அடுத்து மூளையைத் தாக்குகின்றன.

மீண்டும் சிகிச்சை செய்யலாம் என்று கேட்டதற்கு, மருத்துவர்கள் மூலையில் அளவுக்கு மீறிப் பரவிவிட்டது என்று கைவிட்டுவிட்டார்கள், "இட்ஸ் டூ லேட். இப்போ ஒன்னும் செய்ய முடியாது. கொஞ்சம் முன்னாடியே டயக்னோஸ் பண்ணி இருந்த, எதாவது ட்ரீட்மென்ட் குடுத்திருக்கலாம்."

ஒரே நாளில் மீண்டும் அவள் நினைவு திரும்பி எழுந்து நடக்கத் தொடங்கியதால், பெங்களூரில் இருந்து ஊருக்குக் கிளம்பினாள் பெரியம்மா.

ஊருக்கு வந்த பின்னர், அவளைக் காணச் சென்றிருந்தான் கண்ணன்.
"வா கண்ணா. நல்ல இருக்கியா?"
"நல்ல இருக்கனுங் பெரிம்மா."
"எப்போ யூ.எஸ். கிளம்பற?"
"இன்னும் போர் டேஸ்ல கிளம்பறங் பெரிம்மா."
"எல்லாம் பேக் பண்ணியாச்சா?"
"பண்ணியாச்சுங் பெரிம்மா."
நன்றாகப் பேசிக்கொண்டிருந்தாள் பெரியம்மா. வெளியே சென்றிருந்த பெரியப்பா உள்ளே வந்தார்.
"வா கண்ணா. என்ன யூ.எஸ். கிளம்ப ரெடி ஆயாச்சா?"
"ஆச்சுங் பெரிப்பா", புன்னகைத்தான் கண்ணன்.
"சேரி .. அப்பறம், எல்லாரையும் பாத்துட்டு சொல்லிட்டு வந்துட்டயா?"
"ஆச்சுங் பெரிப்பா."
"பக்கத்துக்கு ஊர்ல ஒரு எழவு. அதுக்கு போய்ப் பாத்தியா?"
கண்ணன் வாயைத் திறப்பதற்கு முன் பெரியம்மா குறுக்கிட்டாள், "வாய மூடுங்க. ஊருக்கு போற பையன் கிட்ட எழவு கெழவுன்னு பேசிக்கிட்டு. நான் செத்தா தான் எழவு. கம்முனு இருங்க."
அவள் திட்டியதில், கண்ணனும் வாயடைத்துப் போனான்.

--------

கண்ணன் வெளிநாடு வந்து சேர்ந்துவிட்டான். ஒரு வாரம் ஓடிவிட்டது. ஒருநாள் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவுடன், அவன் அலைப்பேசி அழைத்தது - கண்ணனின் தாய்.
"ஹலோ .. சொல்லுங் மா", கண்ணன் அழைப்பை எடுத்தான்.
"...", அழுதாள் அம்மா.
"என்னம்மா ஆச்சு?"
"பெரிம்மா செதுட்டாங்கடா கண்ணா", அழுதுகொண்டே சொன்னால்.
"...", கண்ணன் வாயடைத்துப் போனான்.
"நேத்து மறுபடியும் மயக்கம் போட்டுட்டாங்கன்னு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணினோம். காலைல அக்கா ரெண்டுபேரும் குளிச்சுட்டு வர்றேன்னு வீட்டுக்குப் போனாங்க. நான் தான் கூட இருந்தேன்."
"..."
"கயல் எங்கனு கேட்டாங்க. நான் பதில் சொல்றதுக்குள்ள தல சாஞ்சுருச்சு. அவ்ளோதான். அப்பிடியே போய்ட்டாங்கடா", இன்னும் அழுதுகொண்டுதான் இருந்தாள்.

அவளுக்கு சமாதானம் சொல்ல வார்த்தைகளைக் கொணர்வதற்குக் கண்ணனால் இயலவில்லை. கண்ணீர்த் துளிகள் இரண்டு மட்டும் மெல்லக் கசிந்தன அவன் கண்களில். பெரியம்மா மழை பெய்து வேகமாய்க் களைந்த மேகம் போல் களைந்துவிட்டாள். கண்ணனின் நெஞ்சம் மழைவிட்ட வானம் போல் வெறுமையாய் மாறியது சிறிது நேரத்தில்.